சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, அதை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (10ந்தேதி) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக முதல் தவணையாக 2000 ரூபாய் ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. தற்போது,  அதற்கான டோக்கன் அளிக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன.. மே 15ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பசியை போக்கும் வகையில், 24 மணி நேரமும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  தொடங்கி வைத்தார். இதனால் ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர்

இதுகுறித்து கூறிய அமைச்சர் சேகர்பாபு, இதுபோன்ற இலவச உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனார்.

இந்த திட்டமான அம்மா உணவகம் வாயிலாக நிறைவேற்றப்படுகிறது. ஏற்கனவே கொரோனா காலக்கட்டங்களில், ஏழை மக்களின்  பசி போக்குவதில் முக்கிய பங்கு வகித்த, இந்த திட்டத்தை திமுக அரசும் தொடர்ந்து முன்னெடுத்து வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.