சென்னை: ஆண்களுக்கும் கட்டணமில்லா அரசு பேருந்து சேவை? வழங்குவது குறித்து நிதி நிலை சீரான பிறகு அரசு பரிசீலிக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ஆண்களுக்கும் விடியல் பயணம் அளிக்கபடுமா என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஆண்களுக்கு விடியல் பயணம் கிடைக்குமா என்றார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர், சிவசங்கர், அரசின் நிதிநிலை சீரானபின் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதை திமுக அறிவித்தது. எனவே, பதவியேற்ற முதல் நாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதையடுத்து 2021ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு பேருந்துகளிலும், கிராமப்புற அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
மகளிர் இலவச பயணத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1,600 கோடி வரை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. 2021ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் 482.34 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டதாகவும், பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவியர் ஆகியோர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த இலவச பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை 29.12 லட்சம் இலவச பயணங்களை திருநங்கைகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் தமிழக அரசு விளக்கமளித்திருந்தது. தொடர்ந்து மகளிர் இலவச பயணத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1,600 கோடி வரை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
இந்த நிலையில் மகளிருக்கு வழங்கப்படுவதுபோல, ஆண்களுக்கு விடியல் பயணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.