பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தேர்தலில் வெற்றிபெறா விட்டால், பொதுமக்களுக்கோ இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்டாதா, இதுபோன்ற சலுகைகள் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தாதா  என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதன்படி  அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல்  நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதி மொத்தம் 71 தொகுதிகளில்  நடைபெறுகிறது.  2வது கட்டமாக நவம்பர் 3ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

இந்த தேர்தலில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம் – பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது.

 ஆளும்கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன்  (ஜேடியு) பாஜக கூட்டணி தொடர்கிறது.  மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஜேடியூ-பாஜக கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜேடியூ 122 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சியான ஹெச்.ஏ.எம்க்கு 7 தொகுதிகளை ஜேடியூ ஒதுக்கியுள்ளது.

முதல்கட்ட தேர்தல்  நடைபெற உள்ள 71 தொகுதிகளில்  தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன், “பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது என்டிஏ ஆட்சியின் கீழ் உயர்வைக் கண்டுள்ளது, இது கடந்த 15 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் 3% முதல் 11.3% வரை வளர்ந்துள்ளது, இது சாத்தியமானது, ஏனென்றால் எங்கள் அரசு மக்களுக்கான நல்லாட்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும். எங்கள் வாக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் வாக்குறுதி இதுவாகும்:
என்.டி.ஏ-க்கு வாக்களித்து அதை வெற்றிபெறச் செய்யுமாறு மாநில மக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நிதீஷ் குமார் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பீகார் முதல்மந்திரியாக இருப்பார். அவரது ஆட்சியின் கீழ், பீகார் இந்தியாவின் ஒரு முற்போக்கான மற்றும் வளர்ந்த மாநிலமாக மாறும்.
பீகார் மாநிலத்தில் அனைத்து குடிமக்களும் அரசியல் ரீதியாக உணர்திறன் கொண்டவர்கள். ஒரு கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் நன்கு அறிவார்கள், புரிந்துகொள்கிறார்கள். எங்கள் அறிக்கை குறித்து யாராவது கேள்விகளை எழுப்பினால், நாங்கள் அளித்த வாக்குறுதியளித்ததை நிறைவேற்றும்போது அவர்களுக்கு நம்பிக்கையுடன் நீங்கள் பதிலளிக்கலாம்” என்று கூறினார்.

அதுபோல நேற்று  பீகார் சட்டசபைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. தலைநகர் பாட்னாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான ராஜ் பப்பர் மாற்றத்துக்கான ஆவணம் 2020 என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

விவசாய கடன் தள்ளுபடி, மின்கட்டண தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதி அதிகரிக்கப்படும் என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் முழுமையாக அகற்றப்பட்டு மாநில அளவிலான விவசாய சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் உள்ள மக்களுக்கு பீகாரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்பது மற்ற மாநிலங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.  அங்கு கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளதால், தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி  ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து இருக்கும் தேஜ் பிரதாப் யாதவின் (லாலுவின் மூத்த மகன்) மனைவி ஐஸ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய் பார்சா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் மகன்.  தேஜ் பிரசாத் யாதவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தில் தன்னை ராய் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி ஒருபுறம் பா.ஜ.க., கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்திருப்பதும், ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக களத்தில் இறங்கியிருப்பதும் பீகார் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வாக்கு சதவீதத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில், தேர்தலில் வெற்றிபெற்றால் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் பாஜகவின் அறிக்கைக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.