திருப்போரூர்
திருமண மண்டபமாக மாறிய சென்னையை அடுத்த திருப்போரூர் கோவிலுக்குச் சொந்தமான தர்ம சத்திரம் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் பகுதியில் கந்தசாமி கோவில் உள்ளது. கோவிலைச் சுற்றி உள்ள நான்கு மாட வீதிகள், அருகில் உள்ள வீதிகள், பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் சுமார் 64 தர்ம சத்திரங்கள் இருந்தன. இங்கு பொதுமக்கள் தங்க, கோவிலுக்குச் சிறப்பு அபிஷேகம் தினசரி எண்ணெய் மற்றும் பால் வழங்கப் பலரும் சிலா சாசனம், பட்டயம் ஆகியவை மூலம் கோவிலுக்கு அளித்துள்ளனர்.
இவற்றில் ஒரு சில சத்திரங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதை நிர்வகிக்கும் பலர் இறந்து விட்டதால் இவற்றில் ஆக்கிரமிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வகையில் திருப்போரூர் தெற்கு மாட வீதியில் உள்ள 6 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் சிலா சாசனம் மற்றும் கல்வெட்டு வைக்கப்பட்டு கோவிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நிபந்தனைகளை மீறி கோவில் அறக்கட்டளை நிர்வகித்தனர். இந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்பனை செய்து மேலும் தர்ம சத்திரத்தைத் திருமண மண்டபமாக மாற்றி உள்ளனர்.

இதைக் கண்டறிந்த கோவில் நிர்வாகம் அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கு நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. ஆனால் அந்த விளக்கம் திருப்தியாக இல்லாத நிலையில் இந்த சொத்துக்களைக் கையகப்படுத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகாமி, திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, விஏஓ ஆகியோர் முன்னிலையில் அரசின் உத்தரவு நோட்டீஸ் ஒட்டப்பட்டு 14,436 சதுரஅடி உள்ள மனை, அதில் இருந்த சத்திரம் ஆகியவை கையகப்படுத்தி சுவாதீனம் செய்துள்ளனர் இந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு ரூ. 8 கோடி ஆகும்.