கோவை

கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் இப்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளி திறப்பு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.   தற்போது 9 முதல் 12 வகுப்புக்களுக்கு பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.   மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அவ்வகையில் நேற்று கோவையில் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இது குறித்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டாகி இருக்கும் நெருக்கடி குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.,

எல்லோருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை எந்த அளவுக்கு தீர்க்க முடியும் என்பதை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளோம்.    கொரோனா முழுவதுமாக முடியாத நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும் எனக் கேட்டது ஆச்சரியமாக உள்ளது.

பெற்றோர்கள் மனதில் கொரோனா குறித்த அச்சம் இன்னும் உள்ளது.  எனவே இப்போதைக்கு 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை.   கொரோனா பரவல் கட்டுக்குல் வருவதை பொறுத்தே இது குறித்து முடிவு செய்யப்படும்.  அப்படியே திறக்கப்பட்டாலும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என வலியுறுத்தக் கூடாது” என தெரிவித்துள்ளார்.