சென்னை

வாடிக்கையாளருக்கு மோசமாக முடி வெட்டியதால் சென்னையில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர விடுதிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகளில் ஐடிசி மவுரியாவும் ஒன்றாகும்.  இங்குள்ள முடிதிருத்தும் மையத்துக்குக் கடந்த 2018 ஆம் வருடம் சுமார் 42 வயதான பெண் மணி ஒருவர் முடி வெட்டிக் கொள்ள வந்துள்ளார்.  அவர் தனது முடியின் அடியில் இருந்து சுமார் 4 அங்குல நீள முடியை வெட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  ஆனால் முடி வெட்டுபவர் அவருடைய நீண்ட கூந்தலை முழுவதுமாக வெட்டி உள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரில் தான் கண்ணாடி அணிபவர் என்றும் முடி வெட்டிக் கொள்ளக் கண்ணாடியை அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் முடி வெட்டுபவர் தனது தலையைக் குனிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதால் தம்மால் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க முடியவில்லை எனவும் முடி வெட்டிய பிறகே தமக்குத் தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து விடுதி நிர்வாகம் மன்னிப்பு கேட்டு விட்டு அவரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவில்லை எனவும் முடி வெட்டுபவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அந்தப் பெண் இது குறித்து தாம் புகார் அளித்த போது மேலாளர் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.  எனவே தாம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் இந்தப் பெண் முடி வெட்டிக் கொண்ட பிறகு மாடலாக ஒரு நேர் காணலுக்குச் சென்றதாகவும் அங்குத் தனது வாய்ப்பை இழந்ததாகவும் தெரிவித்ததற்கு ஒப்புதல் அளித்துள்ளது.  மேலும்  அவருக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்பு மற்றும் மன உளைச்சலுக்காக அவருக்கு ரூ. 2 கோடி அபராதத்தை விடுதி நிர்வாகம் செலுத்த வேண்டும்  எனத் தீர்ப்பு அளித்துள்ளது.    இந்த அபராதத்தை அளிக்க விடுதி நிர்வாகம் ஒப்புக கொண்டுள்ளது.