சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத.

சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களைப் பெறுவதற்கான கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலவச பேருந்து பயண டோக்கன்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) மூத்த குடிமக்களுக்கான இலவசப் பயணச் சீட்டுகள் வழங்கும் திட்டத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய இலவசப் பயண டோக்கன்களைப் பெறுவதற்கான காலக்கெடு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், மொத்தம் ஆறு மாதங்களுக்கான 60 டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சேவையானது தற்போது நகரின் முக்கியமான 42 மையங்களில் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக இந்த மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குப் பிறகு, இந்த டோக்கன்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பேருந்து பணிமனை அலுவலகங்களில் வழக்கமான பணி நேரங்களில் மட்டுமே கிடைக்கும்.

புதிதாக இந்தப் பயண அட்டையைப் பெற விரும்பும் மூத்த குடிமக்கள், தங்களின் இருப்பிடச் சான்றிதழுக்காகக் குடும்ப அட்டையையும் (Ration Card), வயதுச் சான்றிற்காக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே இந்த அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள், அதனைப் புதுப்பிக்கத் தங்களின் பழைய அடையாள அட்டை மற்றும் ஒரு புகைப்படத்தை மட்டும் வழங்கினால் போதுமானது.

அடையாறு, தி.நகர், கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 மையங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள முதியவர்கள் உரிய ஆவணங்களுடன் சென்று தங்களின் இலவசப் பயண டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு, சென்னை  மாநகர் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

[youtube-feed feed=1]