சென்னை

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தினசரி சென்னை மத்திய கைலாஷ் முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது.  இந்த போட்டியில் 187, நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.  போட்டி நடைபெற உள்ள போர் பாயிண்ட் – செரட்டான் நட்சத்திர விடுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன் பெறும் வகையில், ‘நம்ம செஸ், நம்ம பெருமை’ என்ற வாசகம் பொறித்த 5 பேருந்துகள், ‘சுற்றுலா நட்பு வாகனம்’ என்ற வாசகம் பொறித்த 25 ஆட்டோக்களை நேற்று முன்தினம் மாலை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து  அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம்

”முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ‘எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்’ என்று வாசகம் பொறித்த 5 பேருந்துகள்:: அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இவை போட்டி நடைபெற அனைத்து நாட்களிலும் சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து போட்டி நடைபெறும் மாமல்லபுரம் வரை 14 நிறுத்தங்களில் நின்று வரும்.  இவற்றில் யார் வேண்டுமானாலும், எங்கு வேணாலும் ஏறலாம், எங்கு வேணாலும் இறங்கலாம் என்பது இத்திட்டத்தின் நோக்கம்.

மேலும் ‘சுற்றுலா நட்பு வாகனம்’ என்ற வாசகம் பொறித்த 25 ஆட்டோக்கள் மாமல்லபுரம் சுற்றுலாப் பணிகளை ஏற்றிக் கொண்டு சுற்றிக் காட்டக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.  பேருந்துகளில் பொதுமக்கள், இலவசமாகப் பயணிக்கலாம்.  சுற்றுலாத் துறை சார்பில் ஆகஸ்ட் 2, 5 மற்றும் 6ம் தேதி ஆகிய 3 நாட்கள், மாலை 3 மணி நேரம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், நடனக் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.  போட்டி, முடிந்த பிறகு மாமல்லபுரத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது”

எனத் தெரிவித்துள்ளார்.