சென்னை:  தமிழ்நாட்டில்,  நவம்பர் 4முதல் தமிழகத்தில் ஹெல்த் வாக் மற்றும்  மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை இலவசமாக செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மந்தைவெளி பகுதியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, திமுக விளையாட்டு அணி துணைச் செயலாளர் நிவேதா ஜெசிக்கா மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. 1 லட்சம் மகளிருக்கு 25.8 பேர் மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுகிறது. 1 லட்சம் பேரில் 12.7 பேர் இதனால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மார்பக புற்றுநோய் கண்டறியும் 2D மேமோகிராம் கருவி தமிழகத்தில் 43 இடங்களில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல நவீன 3D மேமோகிராம் கருவிகள் ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

இதற்காக 2500 ரூபாய் தொகையில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழுவதும் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், ஆண்களுக் கான புகையிலை மூலம் வாய்ப்புற்றுநோய் என எதுவாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உயிர்காக்க முடியும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்

மருத்துவ இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாகவும், 85% மாநில ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளது. இதில் கடந்த ஆண்டு, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 6 இடங்கள் காலியாக இருந்தது. இந்தாண்டு 83 இடங்கள் காலியாக உள்ளது. இதனால், கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால், முதலமைச்சர் அறிவுறுத்தல் படி ஏற்கனவே தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களை தமிழ்நாடு அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்கும் படி நாளையோ அல்லது நாளை மறுதினமோ சட்டரீதியாக உச்சநீதிமன்றத்திங் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

டெங்கு பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள் தான் உள்ளது. 5200 பேர் இந்தாண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டு தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கட்டுக்குள் உள்ளது. தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியிலும் கொசு மருந்து தெளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களும் தங்கள் வசிக்கும் இடங்களை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள சந்தித்தபோது,  நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு ஹெல்த்வாக் என்ற சாலை அமைக்கப் பட்டிருந்தது. மக்களிடையே நடை பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். இந்த சாலைகள் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. 8 கிலோமீட்டர் என்பது 10 ஆயிரம் அடிகளாகும். தினமும் ஒருவர் பத்தாயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே 8 கி.மீ., தூரத்துக்கு அமைத்துள்ளதாக கூறினார்கள்.

38 மாவட்டங்களில் ஹெல்த்வாக் சாலை துவக்கம் தமிழ்நாட்டுக்கு திரும்பியதும் இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் தெரிவித்தேன். உடனடியாக 38 மாவட்டங்களிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹெல்த்வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. 38 மாவட்டங்களில் ஹெல்த்வாக் சாலை துவக்கப்பட உள்ளது.

நவம்பர் 4ம் தேதி காலை 6 மணிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திட்டத்தை தொடங்கி வைத்து  நடை பயிற்சி மேற்கொள்ள உள்ளார்” என்று கூறினார். சென்னையில், இதற்காக முத்துலட்சுமி ரெட்டி பூங்காவில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வழியாக அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பூங்கா வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது.