சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை வரும் 25ந்தேதி  முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது.

இலவச மிதிவண்டித் திட்டம் முதன்முதலில் பெண் மாணவர்கள் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. 2001-02 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது. இடையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் இலவச மிதி வண்டி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை திமுக அரசு தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் விலையில்லா மிதிவண்டி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை வரும் 25ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது.