கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுந்திருந்த நிலையில், இன்று  4அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர், பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இலங்கையில் அ 36 மணி நேர ஊரடங்கு மல்படுத்தப்பட்டது. இது, இன்று காலை முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக  இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து,  இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், இன்று இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அவர்கள் அமைச்சர்களாக அதிபர்மாளிகையில் பதவி ஏற்றனர். அதன்படி,

01. கல்வி – திரு.தினேஷ் குணவர்தன (சபைத் தலைவர்)

02. வெளிநாட்டு அலுவல்கள் – ஜி.எல்.பீரிஸ்

03. நெடுஞ்சாலைகள் – தஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (அரசாங்க கொறடா)

04. நிதி – அலி சப்ரி

இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முழு அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்டபூர்வமாகவும் நிலையானதுமாக முன்னெடுக்கவே நான்கு அமைச்சர்களை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று நியமித்தார் என தெரிவித்துள்ளது.

அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில், நாடாளுமன்றம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் நிதியமைச்சகங்களின் செயற்பாடுகளுக்காக சபைத் தலைவர் மற்றும் அரசாங்க கொறடா ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் தான் இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்பை வழங்குமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அரச தலைவர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, அனைத்து கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் அரச தலைவர் கோருகிறார் என அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.