தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் சுமார் 100 திறனுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இருந்தாலும், நான்கு முன்னனி நிறுவனங்களின் தடுப்பு மருந்துக்கான ஆய்வுகள் நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைந்துள்ளன.
 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் ஜென்னர் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து பிரிவு உருவாக்கியுள்ள ChAdOx1 nCoV-19 என்ற கொரோனாவிற்கான தடுப்பு மருந்து விரைவில் வெளியாகவுள்ளது. சிம்பன்சியில் காணப்படும் அடினோவைரஸை செயலிழக்கச் செய்து உருவாக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்து, முதல் கட்ட ஆய்வில் உள்ளது. செயலிழக்கச் செய்யப்பட்ட அடினோ வைரஸில், தற்போதைய SARS-CoV-2 – இன் மேற்பரப்பில் நீட்சிகளாக காணப்படும் ஸ்பைக் புரதத்தின் (SPIKE PROTEIN) மரபணுவை செலுத்தி இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஒருவருக்கு இந்த தடுப்புமருந்தை செலுத்தும் போது, இந்த அடினோவைரஸ் ஜலதோஷத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம்,  அதில் உள்ள கொரோனா வைரஸின் புரத நீட்சி நமது நோயெதிர்ப்பு மண்டலத்தினால் அடையாளம் காணப்பட்டு அதற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுகிறது. இதனால் உணமையான கொரோனா வைரஸ் தாக்குதல் நடக்குமானால், அதன் மேற்பரப்பு புரதம் அடையாளம் காணப்பட்டு நமது நோயெதிர்ப்பு மண்டலத்தினால் மொத்த வைரஸும் அழிக்கப்பட்டுவிடும் .

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஏற்கனவே MERS (மத்திய கிழக்கு சுவாச குறைபாடு நோய்) மற்றும் SARS (கடுமையான சுவாசக் குறைபாடு நோய்) போன்ற மற்ற கொரோனா குடும்ப வைரஸ்களுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளில் ஈடுப்பட்டிருந்தது. எனவே, தற்போதைய கொரோனா பரவல் ஏற்பட்டதைக் கண்டதுமே இதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியை உடனடியாக தொடங்கிவிட்டது. எனவே தான் இவர்கள் தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் முந்தி நிற்கின்றனர். தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஐந்து பரிசோதனை மையங்களில், 18 முதல் 55 வயதுடைய நோயாளிகளில் இந்த தடுப்பு மருந்தின் திறனை சோதிக்கும் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான முடிவுகள் இந்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது சரியாக அமையும்பட்சத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகள் நடைபெறும். தடுப்பூசியின் செயல்திறனைத் தீர்மானிக்க அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் தன்னார்வலர்களாக இதில் ஈடுபடுவார்கள். இந்தியாவின் ஸீரம் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றி வருகிறது. ஸீரம் நிறுவனம் பின்னர் தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறது. எல்லாமே திட்டத்தின்படி நடந்தால், அக்டோபர் மாதத்திற்குள் இவர்களின் தடுப்பு மருந்து வெளியாகலாம் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாடர்னா ஆர்.என்.ஏ தடுப்பு மருந்து
மாசசூசெட்ஸை சேர்ந்த பயோடெக் நிறுவனமான மாடர்னாவின் தடுப்பு மருந்து தயாரிப்பு,  அதன் தயாரிப்பு திட்டத்தின்படி ஒரு படி முன்னே உள்ளது.  இதன் தயாரிப்பு மற்ற எவரும் செய்யாத புதிய அணுகுமுறையைக் கொண்டது ஆகும். இதன்படி, கொரோனா வைரஸின் நோய் உண்டாக்கும் திறனுள்ள புரதத்தை (ஆன்டிஜென்) அடிப்படையாகக் கொண்டு அனைவரும் தயாரிப்பை திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது, மாடர்னா நிறுவனமோ, அதன் மூலமான மெசெஞ்சர் ஆர்என்ஏ (mRNA)-வை அடிப்படையாகக் கொண்டு தனது தடுப்பு மருந்தை வடிவமைத்துள்ளது. விளக்கமாகக் கூறுவதானால், ஒரு தடுப்பு மருந்து உருவாக்க பொதுவாக ஒரு கிருமியின் எந்த பகுதி (அது புரதமாக இருக்கலாம்) நோய் உண்டாக்கும் திறனுள்ளதோ அதை மட்டும் பிரித்தெடுத்து அதை மனிதனுக்கு செலுத்துவார்கள். மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலமும் அந்த புரதத்தை அடையாளம் கண்டு அதற்கு எதிரான எதிர்ப்பு புரதங்களை நமது உடலில் உருவாக்கி வைத்துக் கொள்ளும். பின்னாளில் உண்மையிலேயே அந்த கிருமி தாக்கினால் அதில் இருக்கும் நோயுண்டாக்கும் (நாம் தடுப்பூசியாக எடுத்துக் கொண்ட) புரதத்தை அடையாளம் கண்டு, அதற்கு எதிர்ப்பு புரதங்களை உருவாக்கி கிருமிகளை அழித்துவிடும்.   இதில் கிருமியில் உள்ள நோயுண்டாக்கும் திறன் பெற்ற புரதம் ஆன்டிஜென் – ANTIGEN எனவும், நமது நோயெதிர்ப்பு மண்டலம் உருவாக்கும் எதிர்ப்பு புரதம் ஆன்டிபாடி – ANTIBODY எனவும் அழைக்கப்படுகிறது.

மேலும் பொதுவாக புரதங்கள் நமது DNA-வில் உள்ள ஜீன்களில் பொதிந்துள்ள புரததிற்கான செய்திகளின்படி, ஒரு mRNA – வாக நகலெடுக்கப்பட்டு, அதிலிருந்து புரதம் தயாரிக்கப்படுகிறது. அதாவது DNA வில் இருந்து mRNA-வும், அதிலிருந்து புரதமும் உருவாகும். சிறப்பு முறையில் தயாரிக்கப்பட்ட இந்த mRNA-வை அடிப்படையாகக் கொண்டே இந்நிறுவனத்தின் தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் முதற்கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டாம் கட்ட சோதனைகளுக்கான அனுமதியைத் தொடங்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக (யு.எஸ்.எஃப்.டி.ஏ) த்தின் அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த கோடையில் 3-ஆம் கட்ட பரிசோதனைகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இவர்களின் தடுப்பு மருந்து எளிதானதாக இருந்தாலும் விலை உயர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் இவர்களின் விநியோகம் அமெரிக்க அரசால் கட்டுப்படுத்தப்படும். ஏனெனில் இவர்களின் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசின் பயோமெடிக்கல் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பார்டா) சமீபத்தில் 483 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.
ஃபைசர் தடுப்பு மருந்து
ஃபைசர் மற்றும் அதன் ஜெர்மன் பங்குதாரர் பயோஎன்டெக் நிறுவனம் நான்கு விதமான தடுப்பு மருந்துகளில் பணிபுரிகின்றன.  ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான கலவையில், மெசேஞ்சர் ஆர்என்ஏ (Messenger RNA) வைப் பயன்படுத்தி நோய் உண்டாக்கும் ஆன்டிஜென்களை குறிவைத்து தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான வடிவமைப்பு ஒரே நேரத்தில் பல்வேறு mRNA க்களை சோதித்து மதிப்பீடு செய்ய உதவுகிறது. இந்த நிறுவனத்தின் முதற்கட்ட சோதனை அமெரிக்காவில் பல தன்னார்வலர் நோயாளிகளைக் கொண்டு நடத்தப்பட்டது. இவர்களின் பிஎன்டி-162 தடுப்பு மருந்து இரண்டாம் கட்ட சோதனையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தோராயமாக, 360 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் இரண்டு விதமான வயது வகைப்பாடுகளில் (18-55 வயது மற்றும் 65-85 வயது) சோதிக்கப்படவுள்ளனர். மேலும், மனிதர்களின் மீதான ஆரம்பக் கட்ட பரிசோதனைகளுக்கு தேவையான கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தில் அளவுகள் அமெரிக்க சோதனையில் வழங்க தொடங்கியுள்ளதாகவும், ஜெர்மனியில் சோதனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருந்து இன்னும் சோதனைக்கு உட்பட்டிருந்தாலும், ஃபைசர் 2020 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான அளவுகளில் தடுப்பு மருந்தை தயார் செய்வதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறது. சோதனைகள் வெற்றிகரமாக அமையுமானால்,  அக்டோபர் மாத தொடக்கத்தில் யு.எஸ்.எஃப்.டி.ஏவிடம் இருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறமுடியும் என நம்புவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20 மில்லியன் அளவுகளிலும், அடுத்த ஆண்டு நூற்றுக்கணக்கான மில்லியன்கள் அளவிலான மருந்தை விநியோகிக்க தேவைப்படும் எனவும் கூறியுள்ளது.
சினோவாக் பயோடெக் தடுப்பு மருந்து
சீன நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சிநோவேக் பயோஃபார்மா தனது COVID-19 தடுப்பு மருந்தின், முதல்கட்ட மற்றும் 2-ஆம் கட்ட பரிசோதனைகளை செய்து வருகிறது.  தற்போதைய தனித்துவ கொரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவி வரும் பகுதிகளில், 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க, மற்ற நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியோருடன் விவாதித்து வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய தயாரிப்புகளில் உள்ள மருந்துகளில் சிநோவேக் முன்னணியில் உள்ளது. ஏனெனில், இது முன்னர்2௦௦3 ஆம் ஆண்டு பரவிய SARS-க்கு எதிராக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கி வந்தது. ஆனால், அதற்குள் SARS கட்டுபடுத்தப்பட்டதால், அந்த மருந்தின் சோதனை முதற்கட்டத்திலேயே நிறுத்தப்பட்டது. இந்த SARS – ம் சீனாவில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் ஐம்பது  இலட்சங்களை நெருங்கும் இந்த வேளையில், தடுப்பு மருந்துகளை வடிவமைக்கும் ஆய்வுகள் வேகமாக நடைபெறுவதும், வெற்றியடையும் வாய்ப்புகளும் இருப்பது சற்றே அச்சத்தை போக்கும் செய்தியாக உள்ளது.
ஆங்கிலம்: விஸ்வநாதன் பிள்ளை
தமிழில்: லயா