டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பூட்டா சிங் சுய நினைவை இழந்ததால் அக்டோபர் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமாகி விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பூட்டா சிங் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து ராகுல் காந்தி தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

சர்தார் பூட்டா சிங் மரணத்தால் நாடு ஒரு உண்மையான, விசுவாசமான தலைவரையும் இழந்துள்ளது.  அவர் தனது முழு வாழ்க்கையையும் நாட்டின் சேவைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணித்தார். அதற்காக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கல் என்று குறிப்பிட்டு உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பூட்டா சிங், சாத்னா மக்களவை தொகுதியில் வென்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 7 முறை தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார்.