டில்லி,

ஜல்லிக்கட்டுக்கு  அனுமதி வழங்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடிதம் எழுதி உள்ளார்.

ஜல்லிக்கட்டு  நடத்த  உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கடந்த  இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை.

ஜல்லிக்க்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக கட்சி தலைவர்கள்  குரல் கொடுத்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு  கோரிக்கை வைக்கப்பட்டுளளது. .

ஜல்லிக்கட்டு  குறித்த வழக்கில்  உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கிய பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில்மாதவ் தவே  தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு  உச்சநீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடிதம் எழுதிஉள்ளார்.  அதை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் கட்ஜூ தெரிவித்திருப்பதாவது:

ஜல்லிக்கட்டை உடனடியாக அனுமதிக்கும் வகையில் மிருக வதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொண்டு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்.

காளைகளுக்கு கொடுமை எதுவும் நேராத வகையில், உதாரணத்துக்கு காளைகளின் கண்களில் எரிச்சல் வரவழைக்கும் வகையில் பொடி தூவுவது, காளைகளை அடிப்பது, அவற்றின் உடலில் சில இடங்களில் ஊசியால் குத்துவது, காளைகளை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்தல் போன்ற கொடுமைகள் எதுவும் நேராத வகையில் உரிய நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டை அனுமதிக்கலாம். இதில்  தவறு ஏது இருப்பதாக தெரியவில்லை.

தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிப்பதில் யாருக்கும் என்ன ஆட்சேபணை இருக்கவும் வாய்ப்பில்லை.

இதுபோன்ற விஷயங்களில் நடுநிலைத் தன்மை இருக்க வேண்டும். மனிதனுக்கு இணையாக மிருகங்களை வைக்க முடியாது.  உதாரணத்துக்கு, மீன் பிடிப்பதில், மீன் தண்ணீரில் இருந்து வெளியில் எடுக்கப்படுகிறது. இதனால் மீன் மூச்சுத் திணறி இறந்து போகிறது.   இது மீனுக்கு இழைக்கப்படும் கொடுமை இல்லையா? இதனால் மீன் சாப்பிடுவது தடை செய்யப்பட வேண்டுமா?

வண்டியை இழுப்பதற்காக காளைகளின்  உயிர் விதைகள் நசுக்கப்படுகின்றன. இதனை தடை செய்ய வேண்டுமா? ஹலால் இறைச்சி தடை செய்யப்படுமா?

பொங்கல் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் நிலையில்,  ஜல்லிக்கட்டை மிகவும் நேசிக்கும் தமிழக மக்களின் சார்பாக நான் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். மேலே குறிப்பிட்ட  அம்சங்களை தயவு செய்து கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன் “ இவ்வாறு அந்த கடிதத்தில் கட்ஜூ தெரிவித்துள்ளார்.