புதுடெல்லி: எதிர்பாராத நிகழ்வுகளால், உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்று 7 மாதங்கள் ஆகியும், தனது அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை, இன்னும் காலிசெய்யாமல் இருக்கிறார் அருண் மிஸ்ரா.
அவருடைய அதிகாரப்பூர்வ பங்களா, டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ளது.
விதிமுறைப்படி, பதவியிலிருந்து ஓய்வுபெற்றதும், அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை, ஒரு மாதத்திற்குள் காலிசெய்து, அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி, உச்சநீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார் மிஸ்ரா.
ஆனால், அவருடைய உறவினர் வட்டத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 5 மரணங்கள், அவரை, இந்தாண்டு ஜனவரி வரை, வெளியிலேயே இருக்கச் செய்தன. பின்னர், தனது அதிகாரப்பூர்வ இல்லம் திரும்பியதும், இவரின் மனைவி மற்றும் மாமியார் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, மார்ச் 31ம் தேதிவரை, உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டார் அருண் மிஸ்ரா. ஆனாலும், கொரோனா சிகிச்சைக்குப் பிந்தைய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட தேவைகள் குறுக்கிட்டதால், அவர், ஏப்ரல் 30ம் தேதிவரை அவகாசம் கேட்டுள்ளார். அதேசமயம், அவரின் வேண்டுகோள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் இன்னும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.