சேலம்:

சேலம் அருகே உள்ள ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்எல்ஏ தமிழரசு, தனது ஆதரவாளர் களுடன் திமுகவில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவினர் தொடர்ந்து மாற்றுக்கட்சிகளை தேடி ஓடுவது பாமக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் உருவாகி களத்தில் சந்தித்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது பாமகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பல பாமக தலைவர்கள் கட்சியில் இருந்து  விலகி ஓடுகின்றனர்.

சேலத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது,    பாமக மாவட்ட நிர்வாகிகள் பலர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் திமுகவில் இணைந்து பாமகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

சேலம் மாவட்டச் செயலாளர் ஜெயவேல் தலைமையில் ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணைச் செயலாளரும் விஜயகாந் தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இன்று முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் ஏற் காட்டில் எல்.கே.சுதீஷை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார்.

அதே நேரத்தில் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் திமுகவில் இணைந்துள்ளது பாமக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.