நியூயார்க்:

ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டார். இதன் பிறகு அமெரிக்க விமானநிலையங்களில் பயங்கர களேபரம் நடந்து வருகிறது.

விமானநிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் பலர் செய்வதறியாது சிக்கி தவித்து வருகின்றனர். இந்த பிரச்னையில் நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவரும் சிக்கி தவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
நார்வே நாட்டில் 2 முறை பிரதமராக இருந்தவர் க்ஜல் மக்னே போண்டேவிக். 1997-2000 மற்றும் 2001-2005ம் ஆண்டுகளில் இவர் பிரதமராக இருந்தார். இவர் ஐரோப்பாவில் இருந்து கடந்த 31ம் தேதி துல்ஸ் விமான நிலையத்துக்கு விமானத்தில் சென்றார்.

இவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. காரணம்.. அவர் ஒரு முறை ஈரானுக்கு சென்று வந்தது தெரியவந்ததால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டில் அவர் நார்வே முன்னாள் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து போண்டேவிக் கூறுகையில், ‘‘ தீவிரவாதிகள் நாட்டிற்குள் நுழையும் போது அச்சம் ஏற்படும் என்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் நான் தீவிரவாதி இல்லை.

ஆனால், இது வெளிப்படையானதாக இருக்க வேண்டும். எனது பாஸ்போர்ட் கவுரவ பாஸ்போர்ட் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இது போதுமான ஆதாரமாகும். இதை ஏற்று என்னை உடனடியாக அனுப்பயிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘தீவிர பரிசீலனைக்காக மத்திய கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளின் பயணிகள் இருந்த அறைக்குள் என்னை உட்கார வைத்தனர். அங்கு 40 நிமிடங்கள் காத்திருந்தேன். பின்னர் 2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஈரான் பயணம் குறித்து 20 நிமிடங்கள் கேள்வி கேட்டார்கள்’’ என்றார்.

போன்டேவிக் ஓஸ்லோ மையம் என்ற மனித உரிமை அமைப்பின் தலைவராக இருந்தர். மனித உரிமை கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசுவதற்காக அவர் 2014ம் ஆண்டு ஈரான் சென்று வந்தார்.

எனினும் ‘‘2015ம் ஆண்டில் ஒபாமா அரசு சட்டப்படி நான் ஈரான் சென்று வந்தேன். எனக்கே இந்த நிலை என்றால் இதர சர்வதேச தலைவர்களின் நிலையை எண்ணிபார்க்க முடியவில்லை. இதனால் அமெரிக்காவின் கண்ணியத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும்’’ என போன்டேவிக் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதலில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கவும், கலிபோர்னியா மற்றும் பாரிஸ்க்கு வந்த தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்நது இச்சட்டம் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு(சி.பி.பி) செய்தி தொடர்பாளர் கூறுகையில், சிபிபி தனிச் சட்ட பாதுகாப்பு கொண்டதாகும். எந்த தனி நபரையும் அனுமதிப்பது தொடர்பாக விசாரிக்க அனுமதி உள்ளது’’ என்றார்.