சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம் எல் ஏ மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். இவர் 4வது முறையாக கட்சி மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்து வந்த முன்னாள் எம்எல்எ டாக்டர் சரவணன், ஏற்கனவே மதிமுக, திமுகவில் இருந்தவர். அங்கு பிடிக்காத நிலையில், பின்னர் பாஜகவில் இணைந்தார். அங்கும் கட்சி தலைமையிடம் ஒத்துவராத நிலையில், மீண்டும் திமுகவில் இணைய விரும்புவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால், இன்று திடீரென எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தன்னை அதிமுகவில் ஐக்கியமாகிக்கொண்டுள்ளார்.
திமுக எம்எல்ஏவாக இருந்தபோரது, ஜெ. மரணம், அவரது கைவிரல் ரேகை தொடர்பாக வழக்கு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் மருத்துவர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
4 கட்சிகள் மாறிய டாக்டர் சரவணன் – ஒரு பார்வை:
அரசியல் வாழ்க்கையில் கட்சி மாறுவது, பலருக்கு சாக்லேட் சாப்பிடுவதுபோல சாதாரணமாகி வருகிறது. அரசியல் என்பது வருமானம் மிக்க ஒரு தொழிலாக மாறிவிட்ட நிலையில், அதில் பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே இன்றைய அரசியல்வாதிகள் பணியாற்றி வருகின்றனர். மக்கள் சேவை என்ற போர்வையை சுற்றிக்கொண்டு முறைகேடான செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக இன்றைய அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள், தங்களுக்கு வசதியான கட்சிகளுக்கு தாவுவதை வழக்கமாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல மருத்துவரான முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், தற்போது 4வது முறையாக கட்சி மாறி உள்ளார்.
மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவமனை டாக்டர் சரவணனுடையது. இந்த மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பணம் இல்லாமல் இலவச வைத்தியம் செய்து அந்தபகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் டாக்டர் சரவணன். அவரது புகழ் மதுரை முழுவதும் பரவத்தொடங்கியது. தனது புகழை மேலும் பரப்பும் நோக்கில், அவர் அரசியல் கட்சியில் இணைந்து, தனது பெயரை கொடுத்துக்கொண்ட நிகழ்வுகள்தான், அவரது அரசியல் வாழ்க்கையில் தொடர்கிறது.
திமுக அனுதாபியான டாக்டர் சரவணன், ஆரம்பகாலத்தில் வைகோவின் ஆவேசமாக பேச்சில் மயங்கி, மதிமுகவில் இணைந்து பணியாற்றினார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே மதிமுகவில் இருந்த டாக்டர் சரவணன், திடீரென அப்போதைய மாநில பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் 2015ம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
அங்கு ஒத்துவராத நிலையில், சில நாட்களிலேயே அங்கிருந்து வெளியேறி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2016ம் ஆண்டு திமுகவில் இணைத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.
இதனையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட சரவணன் தோல்வி அடைந்தார். அப்போது மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சரவணன் ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை, எனவே ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் தொடர்பாக கைரேகை பதிவு செல்லாது புகார் தெரிவித்து அனைவரையும் பரபரப்புக்குள்ளாக்கினார்.
பின்னர் திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அங்கிருந்து விலகி மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கி கவுரவித்தது மாநில பாஜக தலைமை. தொடர்ந்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மதுரை விமான நிலையத்தில், மறைந்த ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு அண்ணாமலை வந்தபோது, அங்கு வந்த பிடிஆர் கார்மீது தாக்குதல் மற்றும் அவரது கார்மீது செருப்பு வீசப்பட்ட சர்ச்சையில் சிக்கினார்.
இதைத்தொடர்ந்து, பிடிஆர் –ஐ கடுமையாக சாடிய டாக்டர் சரவணன், மாலையில் பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கோரினார். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, பாஜக தலைமையை விமர்சித்ததுடன், அந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அவர் மீண்டும் திமுகவிற்கு செல்ல விரும்புவதாக தகவல்கள் பரவின. ஆனால், திமுக தலைமை அவரை மீண்டும் சேர்க்க ஒப்புதல் வழங்காத நிலையில், டாக்டர் சரவணனின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு (2021) நவம்பர் டாக்டர் சரவணன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, சிங்கமுத்து, எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் என ஏரளமான அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வமும் கலந்ருதுகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதனால் சரவணன் ஓபிஎஸ் பக்கம் சாய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 4, 2023) திடீரென அதிமுக இடைக்காலப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, அவருக்கு பூங்கொத்து கொடுத்து, அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
அரசியலில் இதெல்லாம் சகஜம்ங்க என சமூக வலைதளங்களில் நெட்டிசின்கள் கிண்டலடித்து வருகின்றனர்.