விருதுநகர்: தலைமறைவு முன்னாள் அமைச்சர் மீது பல்வேறு 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் பெற்றார்? என்பது குறித்த விவரத்தை  விருதுநகர் மாவட்ட காவல் துறை வெளியிட்டு உள்ளது.

அரசு வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி அளவில் பண மோசடி செய்தாக எழுந்த புகாரில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரா பாலாஜியை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. தலைமறைவாக இருப்பதால், அவரது வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதுடன், லுக்அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டு உள்ளது. காவல்துறையினர் இந்த நடிவடிக்கைக்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும், இது அதிகபட்சமானது, ஒருதலைப்பட்சமானது  என மற்றொரு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இநத் நிலையில்,  பால்வளத் துறை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்டச் செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான புகார்களின் பட்டியலை  விருதுநகர் மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ராஜேந்திர பாலாஜி யார் யாரிடம் எவ்வளவு பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என்ற பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளத. சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரனிடம்  ரூ.30 லட்சம், இரா.முருகன், க.முருகன், இளங்கோ, பரமசிவம் ஆகியோர் ரூ.1.60 கோடி, ஹரிபாலு ரூ.5.20 லட்சம், கார்த்திக்குமார் ரூ.16 லட்சம், மதுரை கோமதிபுரம் 5-வது தெருவைசேர்ந்த செல்வராஜ் ரூ.16 லட்சம், திருவில்லிபுத்தூர் பாப்பா அங்குராஜ் நகரில் வசிக்கும் வெங்கடாசலம் ரூ.10 லட்சம், சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த குணா தூயமணி ரூ.17 லட்சம், மதுரை வில்லாபுரம் காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் ரூ.7 லட்சம், நெய்வேலி அலங்கரைச்சாமி மகன் ஜோசப்ராஜ் என்பவர் ரூ.7.50 லட்சம் .

இவற்றை சாத்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி உள்ளிட்ட கட்சி பிரமுகர்களிடமும், ராஜேந்திர பாலாஜியிடமும் நேரடியாக தந்துள்ளனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக தனித்தனியாக புகார்கள் பெறப்பட்டு உள்ளன. அதன்படி, ராஜேந்திரபாலாஜி மேலும் ரூ.73.66 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவில் 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.