சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மற்றொரு கைதியான பேரறிவாளன் கடந்த 7 மாதங்களாக பரோலில் வெளியே உள்ள நிலையில், தற்போது நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை கவனித்துக்கொள்ள நளினியை பரோலில் விடுவிக்குமாறு தாய் பத்மா கோரிக்கை வைத்த நிலையில், பரோல் வழங்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். தனது உடல்நிலையை கவனிக்க நளினிக்கு ஒருமாத பரோல் வழங்க வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு இன்று முதல் 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இன்று நளினி பரோலில் வெளியே வந்தார். கடைசியாக, நளினி 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி ஒரு மாத பரோலில் வெளிவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.