சென்னை: பணமோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜிமீது, பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரூ.3 கோடி அளவில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி உள்ளதாக பதியப்பட்ட புகாரின்பேரில், அவரை கைது செய்ய காவல்துறை முயற்சித்து வருகிறது.

இதற்கிடையில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தனர். ஆனால், திடீரென தலைமறைவான ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில்,  ராஜேந்திர பாலாஜி  உதவியாளர், அவரது உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினல், அவரை கைது செய்ய 8 தனிப்படைகளை அமைத்து வலை வீசி தேடி வருவதுடன், அவர் வெளிநாடு தப்பித்துச் செல்லாதபடி, லுக்அவுட் நோட்டீசும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை தமிழக காவல்துறை முடக்கியுள்ளது. அவரின் 6 வங்கி கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்து உள்ளது.