சென்னை: மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து இன்று தேர்தல் ஆணையர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒபிஎஸ் தரப்பில் கலந்துகொண்ட  கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தெரியவில்லை என்றும், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் இன்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்  இணைப்பு குறித்து தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. முதலில் அதிமுக சார்பில் எடப்பாடி தரப்புக்கு மட்டுமே அழைப்பு விடுத்த நிலையில், ஓபிஎஸ் எதிர்ப்பை அடுத்து அவரது அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் ஓபிஎஸ் பிரிவில் இருந்து கோவை செல்வராஜும்,  அதிமுக எடப்பாடி பழனிசாமி பிரிவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவிலிருந்து நாங்கள்தான் கலந்து கொண்டு உள்ளோம் என்றவர், கோவை செல்வராஜ் எந்த கட்சியில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது என கூறினார்.

மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் குளறுபடி உள்ளது என்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறினார்.

இந்த நிலையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்  அப்போது அதிமுக உள்கட்சி  பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தகுந்த நேரத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.