குன்றத்தூர்: தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக என்றும், அதிமுக அரசின் கடன் ரத்து அறிவிப்பு வெற்று அறிவிப்பு என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் எதைச் செய்தோம் என சொல்ல மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கு, கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு, வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள். எந்த மலையை உடைத்து குவாரியாக மாற்றலாம் என்று அதிமுகவினர் சிந்தித்தனர். விவசாயத்தின் மீது விவசாயிகள் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4.85 லட்சம் கடன் வைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி செல்லப்போகிறார். வருவாய் பற்றாக்குறை 65 ஆயிரம் கோடியை பழனிசாமி வைத்துவிட்டு செல்கிறார். கடந்த 3 மாதங்களில் முதல்வர் அடிக்கல் நாட்டிய கற்களை எல்லாம் எடுத்தால் ஒரு கட்டிடமே கட்டிவிடலாம்.
தமிழக மக்களின் மீது பெரும் கடன் சுமையை வைத்துவிட்டுச் செல்கிறது அதிமுக அரசு. விவசாயிகளின் கடன் ரத்தாகாது; எடப்பாடி பழனிசாமி கூறுவதை யாரும் நம்பாதீர்கள். விவசாயிகளின் கடன் ரத்துக்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கடிதம் வந்துள்ளதா?. கடனை ரத்து செய்ய வேண்டுமெனில் வங்கிகளுக்கு ரூ.12,110 கோடியை சுளையாக எடுத்து வைக்க வேண்டும்.
தமிழகம் வாங்கிய ரூ.4.85 கோடி கடன்தான் ரத்து செய்யப்படவில்லை. 6 பவுன் நகை கடன் ரத்து என்றால் எந்த வங்கியில் அடைமானம் வைத்தது. இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் நினைக்கின்றனர். தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக மட்டுமே. இந்தியைத் திணிப்பார்கள்; இந்தி ஆட்சி மொழியாக மாறினால் தமிழ் மெல்ல அழிந்துபோகும்.
மதவெறியை, சனாதன கொள்கைகளை புகுத்த முயற்சிப்போர் பாஜகவினர். சனாதன தர்மத்தில் 30 சதவீதம் பேருக்கு இடமில்லை என்பதே அக்கட்சியின் கொள்கை. வட மாநிலங்கள் கலவர பூமியாக மாறியதற்கு காரணம் பாஜக. பெரியார், அண்ணா, காமராஜர் 100 ஆண்டுகள் சனாதான தர்மத்துக்கு எதிராக போராடி விடுதலை பெற்றுத் தந்தனர்.
பாஜகவுக்கு விழும் வாக்கு ஒவ்வொன்றும் பெரியார், அண்ணா, காமராஜரை மறந்துவிட்டு போடும் வாக்கு. குடியுரிமை திருத்தசட்டம் நிறைவேறியதற்கு காரணம், அதிமுகவும், பாமகவும் ஆதரவாக வாக்களித்தது தான். பாஜகவின் பல்லக்கை சுமந்த அதிமுகவை நிராகரிக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைய தேவையான கொள்கைகளும், தலைமையும் உள்ள கட்சி திமுகதான் என்று பேசினார்.