கொழும்பு,

லங்கையில் ராஜபக்சே ஆட்சியின்போது துணைஅமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புதிய கட்சி ஆரம்பித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்று அந்த கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் தொடக்கவிழா நேற்று  மட்டக்களப்பில் நடைபெற்றது.

கட்சியை தொடங்கி வைத்து பேசிய கருணா, ”தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி தமது கட்சியின் செயல்பாடுகள் அமையும் ” என்றும்,

”13 வது அரசியல் சட்டதிருத்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு – கிழக்கு மாவட்டங்கள் இணைந்ததாகவே இருக்க வேண்டும் ” என்றும் கூறினார்.

”தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக வும் கையாள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தமது கட்சியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருணா என்ற முரளிதரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதியாக இருந்தவர். பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2004ம் ஆண்டு  இயக்கத்தில் இருந்து பிரிந்து மஹிந்த ராஜபக்சேவுடன் இணைந்தார். இலங்கை அரசு விடுதலைப்புலிகளை வேட்டையாட  உதவி புரிந்தார். இதன் காரணமாக அவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்து தனது அமைச்சரவையில் வைத்திருந்தார்.

பின்னர் சிறிசேனா அரசு பதவியேற்றதும், கருணாமீது  ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.  ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டதால் போலீசார் அவரை கைது சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே, கருணா லண்டனுக்கு 2007ம் ஆண்டு வந்த போது, அவர் அடையாள ஆவண மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜாமினில் இருக்கும் கருணா, புதிய கட்சி தொடங்கி இருக்கிறார்.