2007 ம் ஆண்டு வெளியான “சக் தே இந்தியா” திரைப்படத்தில் வரும் மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக கபீர் கான் எனும் வேடத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் ஷாருக்கானிடம் பயிற்சி பெற்ற ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது அனைவரையும் ஆச்சரியப் படவைத்துள்ளது.

இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருவதுடன், இறுதிப் போட்டியில் தங்கம் வெல்லவேண்டும் என்ற ஆவலையும் வெளிப்படுத்தி, அணியினரை உற்ச்சாகப்படுத்தி வருகின்றனர்.

ஹாக்கி அணியினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஷாருக்கான் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் உள்ள உங்கள் 100 கோடி குடும்பத்தினருக்காக நீங்கள் தங்கத்துடன் வாருங்கள், உங்கள் முன்னாள் பயிற்சியாளர் கபீர் கான்” என்று பதிவிட்டுள்ளார்.

“உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி, உங்கள் ஆசையை நிறைவேற்ற இந்திய அணி முழு கவனத்துடன் விளையாடும், இப்படிக்கு உண்மையான பயிற்சியாளர்” என்று தற்போதைய பயிற்சியாளர் ஜோர்ட் மரிஜின் கூறியுள்ளார்.

நடிகர் ஷாருக்கானின் இந்தப் பதிவு சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருவதுடன், இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.