டோக்கியோ ஒலிம்பிக் : பெலாரஸ் ஓட்டப்பந்தய வீராங்கனைக்கு போலந்து தூதரகம் தஞ்சம்

Must read

 

பெலாரஸ் ஓட்டப்பந்தய வீராங்கனை ஸிமனோஸ்கயா-வுக்கு போலந்து தூதரகம் விசா அளித்திருப்பதோடு அவருக்கு போலந்து அரசு தஞ்சமும் அளித்திருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கிரிஸ்ஸினா ஸிமனோஸ்கயா-வுக்கும் அணி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

200 மீட்டர் தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனையான ஸிமனோஸ்கயாவை 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க அணி நிர்வாகிகள் நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டிய ஸிமனோஸ்கயா, தான் 400 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகவில்லை அதற்கான பயிற்சியும் எடுக்கவில்லை என்று கூறி மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து அணி மேலாளர்கள் மீது குற்றம் சாட்டிய அவர் பெலாரஸ் அணியினருடன் மீண்டும் நாடு திரும்ப மறுத்ததோடு நிலையத்தில் தன்னை விமானத்தில் ஏறச்சொல்லி கட்டாயப்படுத்திய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், போலந்து தலைநகர் வார்சா-வுக்குச் செல்ல இருப்பதாக கூறியதை அடுத்து, பெலாரஸை சேர்ந்த தடகள வீரர்கள் சிலர் அவருக்கு வார்சா செல்வதற்கான விமான பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொடுத்தனர்.

போலந்து செல்வதற்கான விசா நடைமுறைகளை ஏற்றுக்கொண்ட தூதரக அதிகாரிகள் அவருக்கு போலந்தில் தஞ்சம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எதேச்சதிகார ஆட்சி நடைபெறும் பெலாரஸ் நாட்டிற்குத் திரும்பிச் சென்றால் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறிவரும் ஸிமனோஸ்கயா, வரும் 4ம் தேதி போலந்து செல்லவுள்ளார்.

ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன் பெலாரஸ் அரசுக்கு எதிராகப் பேசியதாகக் கூறி பத்திரிகையாளர் ஒருவர் லிதுவேனியா நாட்டிற்குச் சென்ற விமானத்தை நடுவானில் வழிமறித்து மின்ஸ்க் நகரில் தரையிறக்கி கைது செய்தது பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது ஸிமனோஸ்கயா விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article