சென்னை: தமிழ்நாட்டில், மருத்துவ இடங்கள் மூலம் திமுக பணம் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி  ஒப்புதல் அளித்துள்ளார் என பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார். அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்.

நீட் விவகாரத்தில் திமுகவினர், அவர்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு எதிராகவும் போராடுமா என்றும் , நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் பணம் படைத்தவர்கள் மட்டுமே, மருத்துவர்கள் ஆனதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சட்டமன்ற மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.   இந்த நிலையில், தமிழ்நாடு மாநில பாஜகப தலைவர்  அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

நீட் தேர்விற்கு முந்தைய காலத்தில் கட்சி நன்கொடைக்கு ஈடாக, மருத்துவத் தகுதிப் பட்டியலை எப்படி விற்றுவிட்டார்கள் என்பதை திமுக மூத்த தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திரு ஆற்காடு வீராசாமி வெளிப்படையாக ஒப்புக்கொண்ட வீடியோவையும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, காணொளி ஒன்றையும் அண்ணாமலை இணைத்துள்ளார்.

அந்த வீடியோவில், “திமுக ஆட்சியில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, யாரெல்லாம் முதல் 100, 200, 300 மற்றும் 400 இடங்களை பிடித்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டு, அந்த விவரங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு விடும். அந்த மருத்துவமனைகள் யாருக்கெல்லாம் அரசு மருத்துவ மனைகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதோ, அந்த மாணவர்களை அழைத்து தங்களது மருத்துவ கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கிவிடும்.

அதன்பிறகு 15 நாட்களுக்குப் பின் கலந்தாய்வு நடைபெறும்போது, தனியார் கல்லூரியில் சீட் கிடைத்த மாணவனுக்கு மெரிட்டில் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும். அந்த சூழலில் தனக்கு தனியார் கல்லூரி வழங்கிய வாய்ப்பை குறிப்பிட்ட மாணவர்கள் நிராகரித்து விடுவார்கள். இதனால் காலியாக இருக்கும் அந்த இடங்களை, நிர்வாக கோட்டாவில் மருத்துவமனை கல்லூரிகள் விற்றுக்கொள்ளும்” என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசிய வீடியோ:

தனது உரையுடன் முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பழைய நேர்காணல் தொடர்பான வீடியோ ஒன்றையும் அண்ணாமலை இணைத்துள்ளார்.

அதில், “கட்சிக்கு நிதி தேவையாக இருக்கும் சூழல்களில் பொருளாளராக இருக்கும் நீங்கள் தன் தயார் செய்ய வேண்டும் என கலைஞர் சொல்வார். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன்.

எப்படி செய்வேன் என்றால் எம்.ஏ.எம். ராமசுவாமி இல்லத்திற்கு செல்வேன். அவர் மருத்துவ கல்லூரி நடத்துகின்ற காரணத்தால், தேர்வு முடிவுகள் தொடர்பான நகல் வேண்டுமென கேட்பார். எதற்கென்று கேட்டபோது, இந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு முதலிலேயே நாங்கள் இடங்களை கொடுத்துவிடுவோம், எப்படியும் கலந்தாய்வுக்கு பிறகு அவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்துவிடுவார்கள். இதனால் காலியாகும் இடங்களை நாங்கள் பிறகு விற்றுக்கொள்வோம் என்றார்.

நானும் கொடுத்தேன். அவருக்கு ஒரு கோடி, 2 கோடி ரூபாய் வழங்குவதெல்லாம் சாதாரணம். நானே சென்று வற்புறுத்தி கேட்டால் குறைந்தது ஒரு 5 கோடி ரூபாய் கொடுப்பார்

என ஆற்காடு வீராசாமி அதில் பேசியுள்ளார்.