சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம்  13ஆம் தேதி தொடங்கி  நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று (செப்டம்பர் 1ந்தேதி)    வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொடர்பான மானியக் கோரிக்கைகள்  விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சிலை வைக்க  பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து சட்ட வல்லுநர்களை ஆலோசித்து சென்னை அண்ணா சாலையில்  ஏதாவது ஒரு இடத்தில் கலைஞர கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று  கூறினார்.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த கருணாநிதிக்கு  39 கோடி மதிப்பிலான நினைவிடம் கட்டப்படும் என்றும்,  மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.