மும்பை வடக்கு தொகுதி முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சஞ்சய் நிரூபம் மீது அவதூறு கூறியதை ஒப்புக்கொண்ட வினோத் ராய், அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

சஞ்சய் நிரூபம் – வினோத் ராய்

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு அர்னாப் கோஸ்வாமி நடத்திய பேட்டியில் 2ஜி ஊழல் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சேர்க்கக்கூடாது என்று தன்னை நிர்பந்தித்ததாக வினோத் ராய் கூறியிருந்தார்.

2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளராக பதவி வகித்த வினோத் ராய், 2ஜி ஊழல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்ற சஞ்சய் நிரூபம் எம்.பி. தனக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறியிருந்தது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, வினோத் ராய் மீது சஞ்சய் நிரூபம் மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வினோத் ராய் தனது நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியிருந்தார்.

2014 ம் ஆண்டு அர்னாப் கோஸ்வாமி எடுத்த பேட்டியில் தான் கூறியதில் துளியும் உண்மையில்லை என்றும் தான் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

வினோத் ராய் சமர்பித்த பிரமாண பத்திரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பதிவிட்டுள்ள சஞ்சய் நிரூபம், “2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது தவறான அறிக்கை சமர்ப்பித்து அவதூறு கிளப்பிய குற்றத்திற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.