சென்னை:

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவு அளிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்துத்துவாவை எதிர்த்து போராடுகிறோம் என்று பேசுவது வைகோ போன்றவர்களுக்கு வாடிக்கை.

தி.மு.க. செய்த துரோகத்தை மறந்து அவர்களை தேடி சென்று ஆதரவு கொடுத்துள்ளார். இதற்கு ஏதாவது காரண காரியங்கள் இருக்கலாம். அதற்காக ஒரு காரணத்தை தேடி அதற்கு இந்துத்துவா என்று பெயர் சூட்டி மக்களை வித்தை காட்டி ஏமாற்ற நினைக்க வேண்டாம். இனியும் இந்த வித்தைகளை மக்கள் நம்பமாட்டார்கள்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்துத்துவாவை எதிர்ப்பதாக இருந்தால், மதசார்பற்றவர் என்றால் முதலில் ராகுல்காந்தியையும், ஸ்டாலினையும் தான் எதிர்க்க வேண்டும். திராவிட கலாச் சாரத்துக்கு பாஜக எதிரானது அல்ல. கலாச்சாரத்தை கட்டிக்காப்பது பாஜக என்பது போலி மதச்சார் பின்மை பேசுபவர்களை தவிர அனைவருக்கும் தெரியும்.

திராவிடம் என்ற பெயரை வைத்திருப்பதால் மட்டும் தமிழ்பற்றாளர்கள் ஆகிவிட முடியாது. திராவிடம் என்ற பெயரை வைக்காதவர்கள் தமிழ் விரோதிகள் என்றும் சொல்லிவிட முடியாது. மக்களை குழப்பும் இந்த போலி அரசியலை பாஜக செய்யாது. இப்படிப்பட்ட போலித் தகவல்களை மக்களிடம் தோலுரித்து காட்டவும் தயங்காது’’ என்றார்.