சென்னை: தமிழகத்தில் வனப்பகுதி ஒருஅங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படக்கூடாது என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரியில் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான பல வழக்குகள் நடைபெற்று வந்துள்ளன. அனுமதி இன்றி கட்டப்பட்ட பல கட்டிடங்களை இடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறியிருந்தார். மேலும் நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர், தமிழ்நாடு மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருவதாகவும், அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்களை குவித்துள்ளதாகவும், வனப்பாதையை விரிவுபடுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்தீப் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டனர். இது சம்பந்தமான வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் .
மேலும் தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.