கடலூரில் வீடுகளை இரவில் முற்றுகையிடும் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

Must read

கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே மரப்பாலம் சீனக்கொல்லி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை நுழைந்தது. பின்னர் அது பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவசர தேவைகளுக்காக வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் இரவு முழுவதும் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அங்கு பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை நேற்று விடியற்காலையில் வனப்பகுதிக்கு சென்றது. அதன்பின்னரே கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், ”காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது. எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு காட்டு யானை வராமல் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article