சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அருகே கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தனது ஆலையை மூடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.  வருகின்ற ஜூலை 31ஆம் தேதியுடன் இந்த ஆலை மூடப்பட உள்ள நிலையில், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கடைசி காரை, ஃபோர்டு நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். அவர்களின் கண்களில், எதிர்காலம் குறித்த கேள்வி தெரிகிறது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக பல ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது. ஆண்டு 4லட்சம் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த  இந்த நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில், உலக நாடுகளின் பொருளாதார மந்தம், போட்டி நிறுவனங்கள் போன்றவற்றால், கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து  வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இதனால், ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனம் முயற்சித்து வந்தது. இடையில் டாடா நிறுவனம் வாங்குவதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்தவொரு நிறுவனமும் வாங்க முன்வராத நிலையில், தொழிற்சாலை முழுமையாக  ஜூன்  மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்தது.  இதனால் அதிர்ச்சி அடைநந்த ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, மேலும் 30நாட்கள் ஆலை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து  ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த கடைசி மாடல் காரான ECO-ஸ்போர்ட்ஸ் கார் நேற்று தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது. கடைசி காரை தயாரித்து முடித்த போர்டு நிறுவனத்தின் காரை ஊழியர்கள் மலர் மாலைகளுடன் அலங்கரித்து கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

20ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த சுமார் 2600 பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மொத்தமுள்ள 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

பல லட்சக்கணக்கான கார்களை உற்பத்தி செய்த இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.