சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய விசாரணைக்கு உகந்ததே என்று கூறிய சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர், கன்னியாகுமரி தவிர வேறு எந்த இடத்தில், புகார் வரவில்லை எனக்கூறப்பட்டது.
இதையடுதுது கருத்து தெரிவித்த நீதிபதிகள், கட்டாய மதமாற்றத்தை தடுக்க விதிகளை வகுப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தது. தொடர்ந்து வழக்கை நாளை (இன்று) விசாரிக்கப்படும் என ஒத்தி வைத்தது.
இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, தமிழகஅரசு தரப்பில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது, அதனால் அதை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதி மன்றம், கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக் கோரும் வழக்கு விசாரணைக்கு உகந்ததே என கூறியதுடன், இதுகுறித்து தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
முன்னதாக சிஎன்என் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டது. அதில், கிறிஸ்தவ பள்ளிக் கூடங்களில் பயிலும் மாணவ – மாணவியர்களை குறி வைத்து, கிறிஸ்தவ மதமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதனை அம்பலப் படுத்தியது.
அப்போது, இந்து மாணவர்களின் குடும்ப பொருளாதாரத்தைக் காரணமாக வைத்து, அவர்கள் மதம் மாற்றப் படுகிறார்கள் எனவும், மாணவ – மாணவியர்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி அளிக்கப் படுவதன் மூலமாக பலர் மதம் மாற்றம் செய்யப் படுகிறார்கள், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவி செய்வதாக ஆசை வார்த்தைக் கூறியும், ஓருவர் மேன்மை நிலையை அடைய கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தான் சாத்தியம் என மூளைச் சலவை செய்யப்பட்டும், பைபிள் மட்டுமே புனிதமானது, கீதை மோசமானது என பேசியும் மதம் மாற்றுகின்றனர் என குற்றம் சுமத்தியது.
மேலும், மாதம் தோறும் பண உதவி செய்தும், தொலைபேசி அளிப்பதாக வாக்குறுதி அளித்தும், இளம் மாணவ – மாணவியர்களை கிறிஸ்துவ மத வழிபாடுகளுக்கு கட்டாயமாக வரவழைக்கப் பட்டும், மதம் மாற்றப் படுகிறார்கள் என குற்றம் சுமத்தி, அந்தத் தொலைக் காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
தனிப்பட்ட ஒருவர், எந்த மதத்தை விரும்பினாலும், அவர் மனம் விரும்பி, தனக்கு பிடித்த மதத்தை பின்பற்றலாம். அந்த உரிமையை, நமது அரசியல் அமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கி உள்ளது. ஆனால் அதனை முழுமையாக கடைபிடிக்காமல், ஆசை வார்த்தை கூறியோ அல்லது கட்டாயப் படுத்தியோ, மதம் மாற்றுவது என்பது, மன்னிக்க முடியாத செயல். மேலே குறிப்பிடப் பட்டுள்ள அனைத்து சம்பவங்களும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடந்த நிகழ்வுகளே என்பதையும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.