டில்லி

ரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் பணப் பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு கடந்த ஆறு மாதமாக ஊதியம் தாமதமாக அளிக்கிறது.

அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே வர்த்தகத்தில் பின் தங்கி வருகிறது. பல தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மொபைல் சேவையை தொடங்கியதில் இருந்து பி எஸ்என்எல் லேண்ட் லைன் சேவைக்கு மவுசு குறைய தொடங்கியது. மொபைல் சேவையிலும் தனியார் நிறுவனங்களுடன் பி எஸ் என் எல் போட்டியிட முடியவில்லை.

பி எஸ் என் எல் நிறுவனத்தை பொறுத்தவரை இதற்கு தேவையான நிதி உதவியை அரசின் தொலை தொடர்புத் துறை அளிக்க வேண்டி உள்ளது. அந்த துறையின் விதிப்படி பி எஸ் என் எல் தனது முதலீட்டு செலவுகளுக்கு மட்டுமே கடன் வாங்க முடியும். தற்போது இருக்கும் தொலை தொடர்பு நிறுவனங்களில் பி எஸ் என் எல் மட்டுமே குறைந்த அளவு கடன் வாங்கி உள்ளது. ஆயினும் வருமானக் குறைவால் பி எஸ் என் எல் இதை திருப்பி செலுத்தவே பணம் இன்றி உள்ளது.

இந்நிலையில் பணப்பற்றாக்குறை காரணமாக பி எஸ் என் எல் நிறுவன நிரந்தர ஊழியர்கள் ஊதியம் தாமதமாக அளிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்துக்கான ஊதியம் அதே மாதம் 28 ஆம் தேதி அளிக்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை அளிக்கப்படாமல் உள்ளது. ஒப்பந்த ஊழியர்களின் நிலை மேலும் மோசமாக உள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாத ஊதியம் பாக்கியில் உள்ளது. அது மட்டுமின்றி ஒரு சில இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆறு மாத ஊதியம் தரப்படாமல் உள்ளது. பி எஸ் என் எல் நிறுவனம் ஊழியர்களின் ஊதியத்துக்காக கடன் வாங்க முடியாத நிலையில் உள்ளதால்  தொலைதொடர்புத் துறை நிதி உதவியை மட்டுமே நிறுவனம் நம்பி உள்ளது.

ஏற்கனவே பி எஸ் என் எல் குறித்து ஆராய்ந்த குழு ஒன்று நிறுவனத்தின் ஊழியர்களில் 35000 பேரை உடனடியாக வேலை நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் தற்போது பி எஸ் என் எல் நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் விருப்ப ஓய்வு உள்ளிட்ட எவ்வகை சலுகைகளையும் அளிக்க முடியாத நிலை உள்ளது.

ஊழியர்களில் சலுகைகளை குறைத்ததால் பி எஸ் என் எல் நிர்வாகம் ரூ. 5000 கோடி அளவில் மிச்சம் பிடித்தும் ஊதியம் வழங்க பணம் இல்லாத நிலை உள்ளது.  இதை ஒட்டி பி எஸ் என் எல் தொழிற்சங்கங்கள் நேற்று ஊதியம் கோரி போராட்டம் நடத்தின. அப்போது நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.