பட்ஜெட் தயாரிப்பின் போது அல்வா கிண்டுவது இதற்கு தான்…..

Must read

டில்லி:

ஆண்டுதோறும் பிப்ரவரி கடைசி தேதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது ரெயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு பிப்ரவரி முதல் தேதியில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு 11 நாள் முன்னதாக மத்திய அரசு செயலகம் வடக்கு பிளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டப்படுவது வழக்கம்.

பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு நிதியமைச்சர் அல்வா வழங்குவார். இதன் சம்பிரதாய நடைமுறைக்கு பின்னால் இருக்கும் கதை இதோ….

சுதந்திரத்துக்கு பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் குடியரசுத்தலைவர் மாளிகையில் அச்சடிக்கப்பட்டது. 1950-ம் ஆண்டு பட்ஜெட் தகவல்கள் முன்னதாகவே கசிந்தது. இதனால், மிண்டோ சாலையில் உள்ள அரசு அச்சகத்துக்கு பட்ஜெட் மாற்றப்பட்டது.

1980-ம் ஆண்டில் நார்த் பிளாக்கில் உள்ள அடித்தளத்தில் நிரந்தரமாக இதற்கென சிறப்பு வசதிகளுடன் அச்சகம் உருவாக்கப்பட்டது. தற்போது வரை அங்குதான் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிக்கும் பணியில் 120 அதிகாரிகள் ஷிப்ட் முறையில் வேலை செய்வார்கள்.

ஷிப்ட் முடிந்த உடன் வீட்டுக்குச் செல்ல முடியாது. நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும் வரை அவர்களுக்கு அச்சகம்தான் வீடு. எவ்வித தொலைபேசிக்கும் அனுமதி இல்லை. ரொம்ப அவசரம் என்றாலே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியே வர முடியும். அதுவும், பாதுகாப்பு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.

உடல்நலக்குறைவு என்றால் அருகிலுள்ள மருத்துவமனையில் படுக்கை முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். 11 நாட்களும் அவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு இருக்காது. அச்சகத்தின் உள்ளே ஒரு தொலைபேசி இருக்கும், அதில் இன்கம்மிங் வசதி மட்டுமே உண்டு. இந்த தொலைபேசி வழியாக பேசப்படும் எல்லா வார்த்தைகளும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.

நிதியமைச்சர் மட்டுமே எந்நேரத்திலும் உள்ளே செல்லும் அனுமதி உண்டு. நிதித்துறை செயலாளர்கள் கூட சிறப்பு பாஸ் பெற்றே உள்ளே செல்ல முடியும். அரசு அலுவலக கம்ப்யூட்டர்கள் தேசிய தகவலியல் மைய இணைப்பிலிருந்து துண்டிக்கப்படும். இப்படி 11 நாட்கள் பணியாற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்தவே அல்வா வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. அதுவே தற்போது வாடிக்கையாகிவிட்டது.

More articles

Latest article