சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு முதல்  பிளஸ் -1 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு  இன்று தொடங்கியது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்1 தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று தமிழகஅரசு கடந்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது.  இதைத்தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

7 ஆயிரத்து 70 மேல்நிலை பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதுகின்றனத்ர.

பள்ளிகளில் இருந்து மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 406 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 509 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களை விட கூடுதலாக 58,897 மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பள்ளிகளில் இருந்து அறிவியல் பாடத்தொகுதியின் கீழ் 5 லட்சத்து 28 ஆயிரத்து 819 பேரும், வணிகவியல் பாடத்தொகுதியின் கீழ் 2 லட்சத்து 61 ஆயிரத்து 703 பேரும், கலை பாடத்தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 969 பேரும், தொழிற்கல்வி பாடத்தொகுதியின் கீழ் 57 ஆயிரத்து 424 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

சென்னையில் 407 பள்ளிகளில் இருந்து 49 ஆயிரத்து 422 பேரும், புதுச்சேரியில் 150 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 404 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, சென்னை புழல் சிறைகளில் உள்ள 62 ஆண் சிறை கைதிகளும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த பொதுத்தேர்வுக்காக 43 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்வர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்பாடுகளை தவிர்க்கும்படி அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

+1 தேர்வு அட்டவணை விபரம்:

07.03.18 – தமிழ் முதல் தாள்
08.03.18 – தமிழ் இரண்டாம் தாள்
13.03.18 – ஆங்கிலம் முதல் தாள்
14.03.18 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.18 – கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
23.03.18 – வணிகவியல் /  மனையியல் / புவியியல்
27.03.18 – இயற்பியல் / பொருளியல்
03.04.18 – வேதியியல் / கணக்குப் பதிவியல்
13.04.18 – தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)
16.04.18 – அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்/ தொழில் கல்வி தியரி