8 மணி சிகிச்சை.. ஆளை காலி செய்த ஆஸ்பத்திரி ’பில்’ ரூ. 80 ஆயிரம்..

மும்பையின் பேஷன் சாலையில் துணி வியாபாரம் செய்து வந்த முகமது அன்சாரி என்பவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு முதல் நாள் தான், ’நோய் அறிகுறி இல்லை’’ என ரிசல்ட் வந்திருந்தது.

உடல்நிலை மோசமானதால் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அவரை தூக்கிச் சென்றுள்ளனர்.

அனைத்தும் ‘ஹவுஸ் புல்’.

வேறுவழி இல்லாமல் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது மணி, காலை 11.

40 ஆயிரம் ரூபாய் முன்பணமாகச் செலுத்தப்பட்ட பின்னரே சிகிச்சை  அளித்தனர்.

அன்று மாலை 7 மணிக்கு , சடலமாக அன்சாரியைக் கொடுத்த, மருத்துவமனை. சிகிச்சை கட்டணம் என்று சொல்லி, 80 ஆயிரம் ரூபாய்க்குப் பில்லையும் நீட்டியுள்ளது.

‘’ 8 மணி சிகிச்சைக்கு 80 ஆயிரம் ரூபாய் பில்லா?’’

ஆடிப்போனார்,அன்சாரியின் தம்பி, சாகித் அன்சாரி.

‘’ பிணத்தை இடுகாட்டுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ரெடி பண்ண வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்று இன்னொரு குண்டையும் வெடித்தது, அந்த மருத்துவமனை.

நண்பர்களிடம் கடன் வாங்கி, சாகித் ’பில்’லை செட்டில் செய்த பின்னரே, உடலை இரண்டு நாள் கழித்து உறவினர்களிடம் கொடுத்துள்ளார்கள்.

‘’அன்சாரியின் உடல் நிலை மோசமாக இருந்ததால் தனி ஏ.சி. வார்டில் சிகிச்சை அளித்தோம். டாக்டர்களுக்கு, கவச உடைகள் வாங்க நிறையச் செலவு..ஆனது’’ என்று 80 ஆயிரம் ரூபாய் கட்டணத்துக்குக் கணக்கு சொல்கிறது , மருத்துவமனை நிர்வாகம்.

– ஏழுமலை வெங்கடேசன்