மைசூரு
தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து 3 ஆம் நாளாக வினாடிக்கு 22000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாகப் பெய்யவில்லை. ஆகவே காவிரி படுகையில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், குறைவான தண்ணீரே வெளியேற்றப்பட்டு வந்தது.
தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறுவை சாகுபடிக்காகக் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தியது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தற்போது காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாஜக, கர்நாடக விவசாயிகள், ஜனதாதளம்(எஸ்), கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்குக் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 நாட்களாக காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் 3-வது நாளாக நேற்று காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா வட்டம் கண்ணம் பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் 108.86 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) தண்ணீர் இருந்தது. அந்த அணைக்கு வினாடிக்கு 2,219 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 15,611 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை வட்டம் பீச்சனஹள்ளி கிராமத்தில் உள்ள கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,278.70 அடி தண்ணீர் இருந்தது. அந்த அணைக்கு வினாடிக்கு 1,935 கன அடி தண்ணீர் வந்தநிலையில் வினாடிக்கு 7,325 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 22,936 கன அடி காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.