தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தைப் பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 24 முதல் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் சத்தான உணவு வழங்குவதில் ஆர்வம் காட்டிவரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் காலை உணவுத் திட்டம் குறித்து தெலுங்கானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு சமீபத்தில் தமிழ்நாடு வந்து ஆய்வு மேற்கொண்டது.

அதிகாலையில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் படும் சிரமங்களைப் போக்கவும் மாணவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுவது குறித்தும் அறிந்த அந்த குழுவினர் தெலுங்கானா மாநிலத்திலும் இதனை நடைமுறைப்படுத்த அம்மாநில முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

இதனையடுத்து தசரா பண்டிகையை ஒட்டி அக்டோபர் 24 முதல் இந்த திட்டத்தை தெலுங்கானா மாநிலத்திலும் செயல்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

1 முதல் 10 வகுப்பு வரை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ள அம்மாநில அரசு இதற்காக ஆண்டிற்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த காலை உணவுத் திட்டத்தை பின்பற்றி தெலுங்கானாவில் உயர்நிலைப் பள்ளி வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடத்தப்பட்டுள்ளது அம்மாநில மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நெருங்கும் நிலையில் சந்திரசேகர ராவுக்கு ஏற்பட்டுள்ள சரிவை சமாளிக்க இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அதிரடியாக நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.