சென்னை,
வேலைகள் முடிந்து தயார் நிலையில் இருக்கும் மேம்பாலங்களை தமிழக அரசு திறக்காவிட்டால் நாங்களே திறப்போம் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் ஆங்காங்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டு  வந்தன. தற்போது சென்னை வடபழனி சந்திப்பில் உள்ள மேம்பாலம் மற்றும் அண்ணா வளைவு மேம்பாலங்கள் பணி முடிந்து, வாகன போக்குவரத்துக்கு திறந்து விடாமல் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:,
சென்னை மாநகரின் முக்கியப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதையாக அவை இன்னும் போக்குவரத்துக்கு திறந்து விடப்படவில்லை.

ராமதாஸ்
ராமதாஸ்

சென்னை கோயம்பேட்டில் இருந்து சென்னை–திருச்சி நெடுஞ்சாலையையும், கிழக்குக் கடற்கரை சாலையையும் இணைக்கும் 100 அடி சாலையான ஜவகர்லால் நேரு சாலையில் பாலம் கட்டப்பட்டு, பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்த பாலம் இன்னும் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவில்லை.
இதனால் ஜவகர்லால் நேரு 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேபோல், தந்தை பெரியார் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அண்ணா வளைவு அருகில் இரு எல் வடிவ பாலங்களை கட்ட முடிவு செய்யப்பட்டது. இவற்றில் ஒரு பாலம் தேர்தலுக்கு முன் கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக பெரியார் சாலையின் ஒரு புறத்தில் தொடங்கி அண்ணா வளைவு வழியாக அண்ணா நகர் செல்லும் சாலையில் அண்ணா சித்த மருத்துவமனை வளாகம் வரை எல் வடிவத்தில் ரூ.117 கோடியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் தயாராகி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை திறக்கப்படவில்லை. பாலங்கள் திறக்கப்படாததற்கான காரணங்கள் என்ன? என்பதையும் அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவுடன் அவரது கைகளால் தான் இந்த மேம்பாலங்களை திறக்க வேண்டும் என்பதற்காகத்தான் இரு பாலங்களையும் தமிழக ஆட்சியாளர்கள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் கண்ணுக்குத் தெரிந்து இந்த இரு பாலங்கள் என்றால், கண்ணுக்குத் தெரியாமல் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளன.
மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மக்களின் பயன் பாட்டுக்காக திறக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு.
எனவே, சென்னை வடபழனி மேம்பாலம், அண்ணா வளைவு மேம்பாலம் உட்பட நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் உடனே தொடங்கி வைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இரு பாலங்களையும் பா.ம.க. திறந்து வைக்கும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.