ஈரோடு: கொங்கு மண்டலத்தின் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை சேமித்து வழங்கி வரும் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ், பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதற்கு பவானி சாகர் அணை என்று பெயர். இந்த அணையானது,  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.  முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்ட இந்த அணை,  அணை ஆசியாவில் மிகப்பெரிய ‘மண் அணை’ என்றும் சொல்லப்படுகிறது.

பவானிசாகர்  அணையின் மொத்த உயரம் 120 அடி. ஆனால், 105 வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதாவது   32.8 டிஎம்சி வரையான நீரை தேக்கிவைக்க முடியும். பவானிசாகர் அணையின் மூலம் 16 மெகவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.  இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரானது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பவானி ஆறு, அங்குள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காவும் பயன்படுத்தப்படுகிறது.  ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 2.7 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

தற்போது மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,422 கன அடி வீதமாக உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம்  101 அடியை தாண்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து எந்த நேரத்திலும்  உபரி நீர் திறக்கப்படும் என்பதால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவிறுத்தி உள்ளது.