தேனி

தற்போது வைகை அணையில் நீர் மட்டம் 69 அடியை எட்டி உள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சுமார் 71 அடி உயரமான வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது.  இந்த வைகை அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69 அடியை எட்டியுள்ளது.

எனவே மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர்மட்டம் இன்று மாலை அல்லது நாளை 70 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். ஆகையால் கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தி உள்ளது  தொடர்ந்து வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.