சென்னை

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்னும் விதியால் பல விமானப் பயணிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் விமானத்தில் பயணம் செய்வோருக்குப் பல விதிமுறைகள் அறிவித்துள்ளன.  அதில் ஒன்று பயணிகள் அவசியம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் இருந்து  மும்பை செல்லும் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.   இந்த விமானம் மீண்டும் வேறொரு நாள் இயக்கப்பட்டது.   இதனால் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பயணிகள் மீண்டும் ரூ.1500 செலவு செய்து பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உண்டானது.

அது மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரகண்ட், சண்டிகர், கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களுக்கு வரும் அனைவரும் கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.   எனவே பல விமான நிலையங்களில் இந்த சான்றிதழ் இல்லாதவர்களை விமானம் ஏறவே அனுமதிப்பது இல்லை.

இந்த சான்றிதழுக்கான சோதனை பயண நேரத்துக்கு 48 மணி நேரத்துக்குள் நடந்திருக்க வேண்டும் என்பதால் விமானம் ரத்து செய்யப்படுவதால் மற்றும் நேரம் மாற்றப்படுவதால் பல பயணிகளால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   மொத்தத்தில் இந்த கட்டுப்பாடு விமான பயணிகளுக்குப் பாதுகாப்பு மட்டுமின்றி பயணம் செய்வதில் சிக்கலும் உண்டாக்குகிறது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

.