சிவகங்கை: 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த காமூகனுக்கு சிவகங்கை மாவட்ட நீதிமன்றம், 5 மரண தண்டனைகளை விதித்து அதிரடி காட்டி உள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ7 லட்சம் வீதம் மொத்தம் ரூ35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் போதை பழக்கம், பாலியல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றவாளிகள் எளிதில் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் 5 சிறுமிகளுக்கு பாலியல் பலாத்காரம்: 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை மற்றும் ரூ35 லட்சம் இழப்பீடு என தீர்ப்பு வழங்கி உள்ளது சிவகங்கை மாவட்ட நீதிமன்றம்.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர், செல்போனில் வீடியோ கேம் விளையாட தருவதாக கூறி திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 5 சிறுமிகளை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(1) (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் சந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள POCSO நீதிமன்றம் ஏப்ரல் 24ந்தேதி அன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு 5 குற்றங்களுக்கு மரண தண்டனை, 4 குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 22 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ7 லட்சம் வீதம் மொத்தம் ரூ35 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.
[youtube-feed feed=1]