சென்னை,

மிழகத்தில் மீன்பிடி தடை காலம் 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தைப் பாதுகாக்க மீன்பிடி தடைக் காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற  மீன்வளத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மீன்பிடி தடை காலம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

, ”கிழக்கு கடற்கரையைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மீனவர்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, மேற்கு கடற்கரையைப் பொறுத்தவரையில் ஜூன் 1-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை மீன் பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது”.

ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தைப் பாதுகாக்க மீன்பிடி தடைக் காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் இந்த ஆண்டில் இருந்து மீன்பிடி தடை காலத்தை 61 நாட்களாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் மீனவர்களுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 1.66 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு அழைப்பதற்காக வாக்கி–டாக்கி வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் 14 ஆயிரத்து 947 மீனவர்களுக்கு இன்னும் 3 மாதங்களில் வாக்கி–டாக்கி வழங்கப்படும்.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் நடுக்குப்பத்தில் இருந்த மீன் சந்தை கடுமையாக சேதம் அடைந்தது. அதை நிரந்தர சந்தையாக கட்டித்தருவதற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு தற்காலிக சந்தை இயங்கி வருகிறது. அதுபோல போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதற்காக ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான தாய்க்கப்பல் திட்டம் விரைவில் தொடங்கப்படும். மாமல்லபுரத்தில் கடல் அருங்காட்சியகத்தை ரூ.250 கோடி செலவில் அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.