சென்னை: தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக, மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ.5,000 வீதம் வழங்கி வருகிறது. மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், நடப்பு ஆண்டிலிருந்து (2021 – 2022) மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை குடும்பம் ஒன்றிற்கு 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1,80,000 மீனவக் குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.108.00 கோடி மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.24 லட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையாக மொத்தம் 74.40 கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும், கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.10 லட்சம் மீனவர்களுக்கு அவர்கள் செலுத்திய சந்தா பங்குத் தொகை ரூ.1,500 உடன் அரசு நிவாரணத் தொகை ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.3,000 என்ற வகையில் மொத்தம் ரூ.4,500 வீதம் நிவாரணத் தொகையாக மீனவர்களுக்கு வழங்கப்படும்.
இதற்கென அரசின் பங்குத் தொகையாக ரூ.63.19 கோடி ஒப்பளிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களிலுள்ள 1.48 லட்சம் கடல் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும், கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2.09 லட்சம் மீனவ மகளிருக்கு அவர்கள் செலுத்திய சந்தா பங்குத் தொகை ரூ.1500 உடன் அரசு நிவாரணத் தொகை ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.4500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இதற்கொன அரசின் பங்குத் தொகையாக ரூ.62.80 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருவள்ளூர் முதல் ராமநாதபுரம் வரையிலான 11 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.46 லட்சம் மீனவ மகளிருக்கு நிவாரணத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும் மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகைகள் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மீன்பிடி குறைவு காலமாக அனுசரிக்கப்படும் ஜனவரி 2022 மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.