மிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு, தாசன் என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இரவு 9 மணி அளவில் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயே வந்த சிங்களக் கடற்படையினர், நமது மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். குண்டடிபட்ட கொம்ளஸ் என்பவரின் மகனான 22 வயது பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்தது; கரைக்குக் கொண்டு வரும்போதே  உயிர் இழந்தார். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சரோன் மற்றும் டிட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவதும், சுட்டுக் கொல்வதும், படகுகளை உடைத்து நாசமாக்குவதும், வலைகளை அறுத்து எறிவதும், மீனவர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து கடலில் தூக்கி எறிவதும், தமிழக மீனவர்களைக் கைது செய்து கொண்டுபோய் சிங்களச் சிறைகளில் அடைப்பதும், அவர்களுடைய படகுகளைப் பிடித்துக் கொண்டு போய், பராமரிப்புக்கு வழியின்றி நாசப்படுத்துவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. இதுவரை 583 தமிழக மீனவர்களை, சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி அன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றதால், ஆத்திரம் அடைந்த சிங்களக் கடற்படையினர் நமது கடல் எல்லைக்குள்ளேயே நுழைந்து, விக்டஸ், ஜான்பால், அந்தோணிசாமி, மாரிமுத்து ஆகிய தமிழக மீனவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றனர். அவர்களுடைய  உடல்கள் கடலில் மீதந்தன. மீனவர் மாரிமுத்துவின் தலையை வெட்டி எறிந்தனர். அவரது உடல் தலையில்லாத முண்டமாகக் கரையில் ஒதுங்கியது.

அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கச்சிமடத்துக்கு வரவில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை ஆய்வில் இருந்த நான் உடனடியாக தங்கச்சிமடத்துக்கு விரைந்தேன். உயிர்களைப் பறிகொடுத்த குடும்பங்களின் கண்ணீரில் பங்கேற்றேன்.

தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா ?

உலகில் எந்த ஒரு நாட்டின் குடிமக்களில் ஒருவரையேனும் இன்னொரு நாட்டு இராணுவம் சுட்டுக்கொல்லுமானால், தூதரகத் தொடர்புகளை உடனே முறித்துக் கொள்வார்கள். அப்படிச் சில நாடுகளுக்கு இடையே யுத்தங்களும் மூண்டது உண்டு.

கேரள மீனவர்கள் இருவரைக் கடல் கொள்ளைக்காரர்கள் என்று தவறாகக் கருதிச் சுட்டுக்கொன்ற இத்தாலியக் கடற்படை வீரர்கள் இருவர் மீது கேரள மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு பின்னர் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலியர்கள் மாதக்கணக்கில் சிறையில் இருந்தனர். இத்தாலிய அரசு மிகுந்த முயற்சி எடுத்ததன் பேரில் அவர்கள் பிணை விடுதலை பெற்றனர். ஆனால், இன்னமும் வழக்கு உள்ளது. அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு உள்ளார்கள்.

ஆனால், இந்தியாவில் எந்தக் கட்சி மத்தியில் ஆட்சி நடத்தினாலும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வது வாடிக்கையாக இருக்கின்றது. அதை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அப்படியானால், தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? தமிழக மக்கள் இந்தியாவின் பிரஜைகள் இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது.

இலங்கை அரசிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்

இந்தப் பிரச்சினைக்கு இந்திய அரசு முடிவு கட்ட வேண்டும். தமிழக மீனவ இளைஞனைச் சுட்டுக் கொன்ற சிங்களக் கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு இலங்கை அரசு உடன்படாவிட்டால் இலங்கையுடனான தூதரகத் தொடர்புகளை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு இதைச் செய்யத் தவறுமானால், தமிழக அரசு சிங்களக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சிங்களக் கடற்படையினரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

உயிர் நீத்த பிரிட்ஜோ, துப்பாக்சிச் சூட்டில் காயமுற்ற தமிழக மீனவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இலங்கை அரசிடம் தண்டனை அபராதமாக வசூலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

தற்போது சுமார் 90 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அல்லல்படுகின்றனர். தினந்தோறும் இப்படித் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்களை இலங்கைச் சிறைகளில் அடைப்பதும், அவர்களை விடுவிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதும் தொடர்வதை நினைக்கும்போது, மத்தியில் உள்ள அரசுக்குச் சூடு சொரணை இருக்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது. இந்தியக் குடிமகன் ஒருவன், இன்னொரு சுண்டைக்காய் நாட்டுக் கடற்படையால் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் முதுகு எலும்பு அற்ற அரசாக இருப்பது சரி அல்ல.

தமிழக மீனவர்கள் எத்தனைபேர் செத்தால் என்ன, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசின் உறவுதான் முக்கியம் என்று கருதும் போக்கு, இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் விபரீதம் ஆகும் என்பதை எச்சரிக்கையாகக் கூறுகின்றேன். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டில் அக்கறையுள்ள காரணத்தால் இதனைத் தெரிவிக்கின்றேன்.

துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த பிரிட்ஜோவின் பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்பதுடன், இச்சம்பவத்தில் காயமுற்ற மீனவச் சகோதரர்கள் நலம் அடைய வேண்டும் என ஏங்குகிறேன்” என்று தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.