முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

Must read

சென்னை:
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது. அதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்பட்டு கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கட்டாயம் பெற வேண்டும் எனவும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31ஆம் தேதிக்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் பிப்.18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். முன்னதாக, எம்.பி.பி.எஸ். மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் பிப்.16ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

More articles

Latest article