சென்னை: சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் முதன்முறையாக மூளைக்கட்டிக்கு (Brain Tumor) கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளின் வரலாற்றில் முதன்முறை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனையின் மருத்துவர்கள், மகிழ்ச்சியை டிவிட் மூலம் பகிர்ந்துள்ளனர்.
பொதுவாக மூளைக் கட்டி பாதிக்கப்பட்டவர்கள், பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறுவர். ஒருசிலரே அறுவை சிகிச்சை மூலம் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்காக லட்சக்கணக்கான பணம் செலவாகும். ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் மூளை கட்டிக்கான சிகிச்சை கதிரியம் மூலம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ள அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில், மூளைகட்டி பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, கதிரியக்க சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சிகிச்சை மூலம், மூளைக்கட்டி (பிரெய்ன் டியூமர்) பாதிக்கப்பட்டவர்களுக்கு தலையில் அறுவை சிகிச்சை, அதாவது, மண்டை ஓட்டின் எலும்புகளைத் திறக்காமல், மூளைக்கட்டி கதிரியிக்க சிகிச்சை மூலம் அழிக்கப்படுகிறது, இதனால் நோயாளிகளுக்கு மயக்க மருந்து செயல் முறைகள் தேவையில்லை., ஆனால் முடிவுகள் அறுவை சிகிச்சையைப் போலவே இருக்கும் என்றும், நோயாளிக்கு முறையாக ஒரு நாள் சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சிகிச்சை முதன்முறையாக ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டது. மயக்க மருந்து இல்லாமல் நடைபெற்ற இந்த கதிரியியக்க சிகிச்சையை நோயாளி சிகிச்சையை நன்கு பொறுத்துக்கொண்டார், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் பெருமிதமாக தெரிவித்து உள்ளனர்.
இதுபோன்ற சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 3.5 முதல் 4 லட்சம் வரை செலவாகும். ஆனால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.
இந்த சாதனையை நிகழ்த்திய ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புற்றுநோயியல் குழுவிற்கு பத்திரிகை டாட் காம் இணையதளம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது. சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.